உயர்மட்டக் கூட்டம் கூட்டி விவாதிக்க இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி அழைப்பு
ஜகார்த்தா: மியன்மாரில் வன்முறை சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவந்து அங்கு ஜனநாயகம், அமைதி, நிலைத்தன்மையை உருவாக்க ஆசியானின் உயர்மட்டத் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்ேகா விடோடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்தொடர்பில், ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் புருணை மன்னர் ஹசனல் போல்கியாவுடன் தாம் பேசவுள்ளதாகவும் அவர் மேற்கு ஜாவாவில் உள்ள அதிபர் மாளிகையிலிருந்து வெளிவரும் வானொலி அறிவிப்பின் மூலம் திரு ஜோக்கோவி நேற்று தெரிவித்தார். மியன்மார் நிலவரம் குறித்து ஆசியானின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பது குறித்து தாம் புருணை மன்னருடன் பேசப் போவதாக அவர் சொன்னார்.
மியன்மாரில் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியையும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேருவதையும் நிலைநாட்டி அங்கு உடனடியாக ஜனநாயகம், அைமதி, நிலைத்தன்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டுவருவது முக்கியம் என்று அவர் கூறினார்.
அத்துடன், பிப்ரவரி 1ஆம் தேதி நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பின் ஏற்பட்ட ராணுவ ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் மாண்டோரின் குடும்பங்களுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் ெகாண்டார் திரு ஜோக்கோவி.
முன்னதாக, இம்மாதம் 2ஆம் தேதி ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் இணையம் வழி அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மியன்மார் குறித்து விவாதித்தனர். அதில், மியன்மார் ராணுவம் வன்முறையைக் கைவிட்டு மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக மியன்மார் ராணுவ ஆட்சியைக் கண்டித்ததைப் போல் ஆசியான் நடந்துகொள்ளவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே, மியன்மாரின் ராணுவ அடக்குமுறையின்கீழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்று ஜப்பானில் வெளியாகும் யோமியூரி ஷிம்புன் என்ற பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு ராணுவம் சற்றும் தயங்காமல் பொதுமக்கள் மீது கண்டபடி துப்பாக்கிச்சூடு நடத்துவதாகக் கருத்துரைத்த அந்தப் பத்திரிகை, இம்மாதம் 14, 15ஆம் தேதிகளில் மட்டும் 90 பேருக்கு மேல் மாண்டுவிட்டதாகக் கூறுகிறது. மியன்மாரின் ஆகப் பெரிய நகரமான யங்கூனின் சில பகுதிகளை ராணுவம் தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் மியன்மார் ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நினைவு நாளான மார்ச் 27ஆம் தேதிக்குள் ஆர்ப்பாட்டங்களை முழுவதுமாக ஒடுக்க அது எண்ணம் கொண்டுள்ளதாகவும் யோமுரி ஷிம்புன் கூறியுள்ளது.

