சோல்: மலேசியாவில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட வடகொரிய நாட்டவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என மலேசிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான உறவு மோசமான நிலையை எட்டிவிட்டதாக வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ நேற்று செய்தி வெளியிட்டது. அமெரிக்கா இது தொடர்பான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் மலேசியாவின் நீதிமன்றம் அந்த வடகொரியரான முன் சோல் மியோங் என்பவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
கள்ளப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வடகொரியர் முன் சோல் மியோங் மீது, அமெரிக்கா முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது. அதனையடுத்து அவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
மியோங், மலேசியாவில் இருந்து பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை போலியாக சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
மலேசியாவின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது. அனைத்துலகச் சட்டத்தையும் மீறி அமெரிக்கா எங்கள் நாட்டின்மீது கொண்டுள்ள பகைமையுணர்வுக்கு துணைபோகும் வகையில் எங்கள் நாட்டுக் குடிமகன் ஒருவரை மலேசியா காவு கொடுக்கத் தயாராகிவிட்டது. இது ஏற்கத்தக்கதல்ல. மலேசியாவின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கு இடையே இறையாண்மையைக் கட்டிக்காக்கும் பொருட்டு நட்புறவுக்குப் போடப்பட்ட அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்துவிட்டது என்று வடகொரியா தெரிவித்தது.

