ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு
ஐரோப்பிய நாடுகள் பச்சைக்கொடி
ஆம்ஸ்டர்டாம்: ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி போடுவதை மீண்டும் தொடர்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன. முன்னதாக அந்த நாடுகள், ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசியில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதை மக்களுக்குப் போடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தன. அதன்பின் ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆஸ்ட்ராஸெனிகா குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் நன்மை குறித்து நம்பிக்கை தெரிவித்தது. அதனையடுத்து ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
ரஷ்யத் தடுப்பூசிக்கு பிலிப்பீன்ஸ் அனுமதி
மணிலா: பிலிப்பீன்ஸில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரகாலப் பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் 'ஸ்புட்நிக் வி' கொவிட்-19 தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது. 'ஸ்புட்நிக் வி' தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதினர் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினரின் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மருந்து 91.6% பயனுள்ளது என்பது தெரியவந்ததாக அந்தத் துறை தெரிவித்தது. கடந்த மாதம் வியட்னாமில் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டது.
சீனாவில் கனடா நாட்டவர் மீது விசாரணை
பிடாண்டோங் (சீனா): கனடாவைச் சேர்ந்த வர்த்தகர் மைக்கல் ஸ்பாவர் (45) என்பவர், சீனாவில் உளவு பார்த்ததாக 2018ஆம் ஆண்டு பிற்பகுதியில் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் நேற்று நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரம் ரகசியமாக விசாரிக்கப்பட்டார். இதனை சீனாவில் உள்ள கனடா நாட்டுத் தூதரக அதிகாரி ஜிம் நிக்கல் தெரிவித்தார். இந்த வழக்கின் மறுவிசாரணை குறித்தும் தீர்ப்பு குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டில் சீனாவின் 'ஹுவாவெய்' நிறுவனத்தின் நிறுவனரின் மகளும் அந்நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அதிகாரியுமான மெங் வான்ஸௌ என்பவருக்கு அமெரிக்கா கைதாணை பிறப்பித்தது. அதனையடுத்து அவர் கனடாவில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2019 டிசம்பர் மாதம் சீனாவில் கனடாவின் மைக் ஸ்பாவரும் அவருடன் மைக்கேல் கோவ்ரிக் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

