மத்திய இலங்கையில் இன்று (மார்ச் 20) பயணிகள் பேருந்து ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசாரா நகருக்கு அருகே பேருந்து ஒன்று செங்குத்துப்பாதையில் கவிழ்ந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் பேருந்து ஒன்று, பசாராவின் மலைப்பாங்கான பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் விபத்து நேரிடாமல் தவிர்ப்பதற்காக சற்று பேருந்தை ஒதுக்கியபோது, சாலையில் இருந்து தடம்புரண்டு அருகேயிருந்த பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தது என்று சொன்னார்.
விபத்தில் இறந்தவர்களில் 5 பேர் பெண்கள் மற்றும் 8 ஆண்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணையில் ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இலங்கையில் கடந்த 16 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்து இது என்று அந்நாட்டு காவல்துறை கூறியது.

