இந்தியாவில் மீண்டும் வேகம் எடுத்திருக்கும் கிருமிப் பரவல் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. புதிதாக 40,953 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் ஆக அதிகமாகப் பதிவான ஒருநாள் தொற்று இது. 2020 நவம்பர் 29ல் 41,810 என பதிவான எண்ணிக்கையை புதிய சம்பவங்கள் நெருங்கி வருகின்றன.
குறிப்பாக, கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு நாளும் 20,000க்கும் மேல் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக புதிய நோயாளிகளுக்கும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைவோருக்கும் இடையிலான விகிதம் அதிகரித்து வருகிறது. புதிதாக 40,953 பேர் பாதிக்கப்பட்ட அதே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,653 என பதிவானது.
புதிய எண்ணிக்கையில் பெரும் பகுதி, அதாவது 25,681 சம்பவங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி உள்ளன.
இம்மாநிலத் தலைநகரான மும்பை ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 3,062 தொற்றுச் சம்பவங்கள் பதிவானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

