சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தாலும் பல பகுதிகளிலும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. முக்கிய அணை ஒன்று நிரம்பி வழிவதால், ஆறுகளில் நீர் கரைபுரண்டோடும் என்பதாலும் அதனால் திடீர் வெள்ளம் ஏற்படும் என்பதாலும் சிட்னி நகர மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சிறு சூறாவளியால் அந்நகரின் மேற்கிலுள்ள புறநகர்ப் பகுதியில் 30 வீடுகள் சேதமடைந்தன; மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்துள்ள நிலையில், வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சன்னல் உயரம் வரை வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதைத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காட்டின. வெள்ளத்தால் ஒரு வீடு முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஆயினும் அவ்வீட்டின் உரிமையாளர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கெண்டால் நகரில் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 மாணவர்களும் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பள்ளி நூலகத்திலேயே நேற்று முன்தினம் இரவைக் கழித்தனர்.

