அராவ்: தூதரக உறவை முறித்துக்கொள்ளும் வடகொரியாவின் முடிவால் மலேசியாவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று மலேசிய நிதி அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பொருளியலில் வடகொரியாவின் பங்களிப்பு மிகச் சிறியது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரகத்தைவிட்டு அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மலேசியா நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
முன் சோல்-மியோங் என்னும் வடகொரிய நாட்டவரை மலேசியா வெளியேற்றியதன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சை மூண்டது. கள்ளப் பண விவகாரம் தொடர்பில் இவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.