யங்கூன்: மியன்மாரின் மத்திய மண்டலே நகரில் நேற்று மருத்துவர்களும் தாதியரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் கூடினர். இருந்தாலும் பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் மோதலை தவிர்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் சென்ற மாதம் ஜனநாயக ஆதரவுத் தலைவி சூச்சி அம்மையாரைக் கைதுசெய்துவிட்டு ஆட்சியை ராணுவத் தலைவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
அதனை அடுத்து அந்த நாட்டில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை ஏறத்தாழ 250 பேர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மரண எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏறக்குறைய 2,500 பேர் கைதாகி உள்ளதாகவும் அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர் களும் ராணுவத்தினரும் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் பாணியில் செயல்பட்டுவருவதாகத் தெரிகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மியன்மார் ராணுவ ஒடுக்குமுறை களை அனைத்துலக நாடுகள் கண்டித்து வருகின்றன என்றாலும் இரத்தக்களரி நிற்கவில்லை.
இதனிடையே, மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் 11 பேருக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அங்கீகாரம் வழங்க இருந்தது.

