கோலாலம்பூர்: கோலாலம்பூரில் செயல்பட்டு வந்த வடகொரிய தூதரகம் மூடப்பட்டதை அடுத்து நேற்று ஊழியர்கள் அலுவலகத்தை காலி செய்தனர்.
மலேசியா அரசாங்கம் செய்த காரியத்திற்குத் தொடர் விளைவுகளை அந்த நாடு சந்திக்க வேண்டி இருக்கும் என்று வடகொரிய தூதர் கிம் யு சோங் அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதற்கு முன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
வடகொரியாவைச் சேர்ந்த முன் சோல் மியோங் என்பவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி கோலாலம்பூர் நீதிமன்றம் இம்மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டது.
முன் சோல் மியோங், கள்ளப்பண விவகாரம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் எதிர்நோக்கி இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து மலேசியாவுடன் கூடிய அரசதந்திர உறவுகளைத் துண்டிக்கப்போவதாக வடகொரியா அறிவித்தது. அதை மலேசியா கண்டித்தது. இதைத் தொடர்ந்து, குடும்பத்துடன் வெளியேறும்படி கோலாலம்பூரில் செயல்படும் தன் தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் வடகொரியா உத்தரவிட்டது. முன் 2019ல் கைதானார்.
சட்டவிரோதமாக பல பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக மோசடி பத்திரங்களையும் கள்ளப் பணத்தையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார் என்று அமெரிக்கா கூறுகிறது.

