செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

பேங்காக்கில் கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டு: 30 பேர் காயம்

பேங்காக்: தாய்லாந்தில் முடியாட்சி முறை சீரமைக்கப்பட வேண்டும்; அரசமைப்புச் சட்ட மாற்றங்கள் தேவை; தடுத்து வைக்கப்பட்டு உள்ள போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு தலைநகர் பேங்காக்கில் சனிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி சுட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்தில் சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. சனிக்கிழமை 30 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் பொதுமக்களும் போலிசாரும் அடங்குவர் என்றும் எரவான் மருத்துவ நிலையம் என்ற அமைப்பு நேற்று தெரிவித்தது.

தென் சீனக் கடல் பகுதியில் 220

சீனக் கலங்கள்: பிலிப்பீன்ஸ் கவலை

மணிலா: சர்ச்சைக்கு உரிய தென் சீனக் கடல் பகுதியில் இந்த மாதம் ஏறத்தாழ 220 சீன ராணுவ கலங்கள் காணப்பட்டதாக பிலிப்பீன்ஸ் கவலை, அச்சம் தெரிவித்து உள்ளது. அந்தக் கலங்களில் சீன கடல் துறை வீரர்கள் இருந்ததாக நம்பப்படுவதாகவும் பிலிப்பீன்ஸ் கடலோர காவல் படை தெரிவித்தது.

இது பற்றி அரசதந்திர ரீதியில் சீனாவிடம் ஆட்சேபத்தைப் புலப்படுத்துவீர்களா என்று கேட்டபோது, ராணுவ அதிகாரிகள் அது பற்றி தெரிவித்தால் மட்டுமே தான் அவ்வாறு செய்யப்போவதாக பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் டியோடோரோ கூறினார்.

அட்லாண்டாவில் ஆர்ப்பாட்டம்

அட்லாண்டா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் அண்மைய நாட்களில் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆசிய மாதர்கள் ஆறு பேர் அடங்குவர்.

அந்தச் சம்பவங்களை எதிர்த்து அந்த மாநிலத்தின் தலைநகரான அட்லாண்டாவில் சனிக்கிழமை ஆசிய-அமெரிக்க சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் ஆசியர்களுக்கு எதிரான வன்செயல் ஓராண்டு காலமாகவே ஏறுமுகமாக இருக்கிறது. சீனாவில் 2019 பிற்பகுதியில் முதன்முதலாக கொவிட்-19 கிருமி தலைதூக்கியது. அமெரிக்காவில் அந்தக் கிருமி அதிகமாக பரவியது. ஆசிய-அமெரிக்கர்களே இதற்குக் காரணம் என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடப்பதாக சமூகத் தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மேன்மேலும் பலரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பயணிகள் தனி இடங்களில் தனித்து இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு வீட்டிலேயே அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலை வரலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மர்ஃபி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிலும் உலகிலும் தடுப்பூசி இயக்கம் சூடுபிடிப்பதை அடுத்து, ஆஸ்திரேலியா தனது எல்லை மற்றும் தனிமைக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக மறுபரிசீலனை செய்ய தொடங்கும் என்றும் அவர் 'ஸ்கை நியூஸ்' தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவித்தார்.

அபு சயாப் பயங்கரவாதி கொலை: இந்தோனீசியர்கள் மீட்பு

மணிலா: பிலிப்பீன்ஸ் துருப்புகள், நேற்று அபு சயாப் பயங்கரவாத அமைப்பின் ஆட்கடத்தல் பிரிவின் தலைவர் களில் ஒருவரைக் கொன்று இந்தோனீசியர்கள் நால்வரை மீட்டனர். மைக் என்ற பெயருள்ள மஜான் சகிஜுவான் என்ற அந்தப் பயங்கரவாதி, பல ஆட்கடத்தல் சம்பவங்களுக்குக் காரணகர்த்தா என்று லெப்டினண்ட் ஜெனரல் வின்லுவான் ஜூனியர் கூறினார்.

லான் குயான் என்ற நகரில் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டு குண்டடிபட்டு அந்தப் பயங்கரவாதி மாண்டதாக அவர் தெரிவித்தார்.