மணிலா: பிலிப்பீன்சில் கிருமித் தொற்று அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தியது. தலைநகர் மணிலாவில் தேவாலயங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக அன்றாட புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 7,000ஐ தாண்டி வருகிறது.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து 663,000 பேருக்கு மேல் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லை.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மணிலாவில் வசிப்பவர்கள்.
அந்த நகரில் 12 மில்லியன் பேர் ஏழ்மையிலும் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.
"கிருமித்தொற்று பரவலைத் தடுப்பதே எங்களின் முதல் இலக்கு," என்று அதிபரின் பேச்சாளர் ஹாரி ரோக் குறிப்பிட்டார்.
இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய விதிமுறை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும். நாட்டின் பொருளியல் நகரமான மணிலாவை முற்றிலும் முடக்குவதற்குப் பதிலாக ஊழியர்கள் வழக்கம்போல பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
ஆனால் தேவையற்ற பயணங்களுக்கும் வட்டாரத்துக்கு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

