லண்டன்: அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று பிரிட்டன் எச்சரித்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் இல்லையென்றால் அஸ்ட்ராஸெனகா ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.
ஆனால் அது நல்ல யோசனை அல்ல என்று பிரிட்டன் தெரிவித்தது. தடுப்பூசி பற்றாக்குறையை ஐரோப்பிய ஒன்றியம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதை உலகமே கண்காணித்து வருகிறது. இதில் புருஸ்ஸல்ஸின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படலாம் என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.
2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 90 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை விநியோகிக்க அஸ்ட்ராஸெனகா உறுதி வழங்கியுள்ளது. இதனை நிறைவேற்ற முடியாவிட்டால் அந்நிறுவனத்துக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லேயென் கடந்த சனிக்கிழமை மிரட்டியிருந்தார்.
ஆனால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது நல்ல தீர்வாக அமையாது என்று பிரிட்டன் கூறி வருகிறது.
தடுப்பூசி விநியோகத்தை சுற்றி சுவர் எழுப்பி தடுக்கப்பட்டால் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் ஆகிய இரு தரப்பு குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் வாலஸ் கூறினார்.

