சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர் தங்குவிடுதி ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் கிருமித்தொற்று ஏற்படுத்தக்கூடிய 'கொவிட்-19 ஆர்என்ஏ' அடையாளம் காணப்பட்டதால் அங்கு தங்கி யுள்ள மாணவர்களுக்கு அதிரடியாக கொவிட்19 சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இதற்காக இன்று (மார்ச் 23) அங்கு கொவிட்-19 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கைத் தொலைபேசி, அடையாள அட்டை, மாணவர் அட்டை ஆகியவற்றுடன் வரிசையில் நின்று இன்று பரிசோதனை செய்துகொண்டனர்.
'யுடவுன்' என்று அழைக்கப்படும் யூனிவர்சிட்டி டவுனில் உள்ள நார்த் டவர் கட்டடத்தில் 13 குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களுக்குப் பரிசோதனை நடத்தப் பட்டது என்று என்யுஎஸ் தெரிவித்து.
கொவிட்-19 சோதனை முடிவுகள் தெரியும் வரையில் குடியிருப்பில் தங்கியிருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடியிருப்பைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'பிசிஆர்' சோதனையைச் செய்துகொள்வது அவசியம் என்று என்யுஎஸ் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு, மூன்று நாட்களில் சோதனை முடிவு தெரியவரும். அந்த முடிவைப் பொறுத்து அடுத்து செய்ய வேண்டியவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதுவரை மாணவர்கள் இணையம் வழியாக வகுப்பறை பாடங்களில் பங்கேற்கலாம்.
குளியல் அறையைப் பயன்படுத்துவது, துணிகளை சலவைக்குப் போடுவது, உணவைப் பெற்றுக்கொள்வது போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மாணவர்கள் அறையைவிட்டு வெளியே செல்ல அனுமதி உண்டு.
என்யுஎஸ் இணையத்தளம் வழியாக நாளுக்கு இரண்டு முறை தங்களுடைய வெப்பநிலையை அவர்கள் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் வெளி ஆட்களைச் சந்திக்க அனுமதி கிடையாது என்று என்யுஎஸ் தெரிவித்தது.
நார்த் டவரில் தங்கியுள்ள பெரும்பாலானோர் ெவளிநாட்டு மாணவர்கள். அவர்கள் முதுநிலைப் பட்டம் படித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை காலை 11.00 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரியில் குறைந்த அளவிலான 'கொவிட்-19 ஆர்என்ஏ' அடையாளம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மாணவர்களுக்கு அவசர சுற்றறிக்கையை என்யுஎஸ் அனுப்பியது.

