டென்வர்: அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தின் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 'கிங் சூப்பர்ஸ்' என்னும் பேரங்காடியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்தச் சம்பவம் நடந்த இடம் டென்வர் நகரின் வடகிழக்குப் பகுதியில் 45 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக போல்டர் போலிஸ் துறைத் தளபதி கெர்ரி யாமாகுச்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவத்தில் மாண்ட போலிஸ் அதிகாரி எரிக் டேலி என்பவருக்கு வயது 51 என்றார், போல்டர் போலிஸ் துறை தலைவர் மாரிஸ் ஹெரோல்ட்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களின் விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் இருக்கும் ஆடவர், இந்தச் சம்பவத்தில் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் இருந்து எவ்விதத் தகவலும் இப்போது பெறமுடியவில்லை என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்தச் சம்பவம் குறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. மேல் சட்டை அணியாத நிலையில், பாக்சர் காற்சட்டை அணிந்து தாடியுடன் காலில் ரத்தம் வடிய காணப்பட்ட ஆடவர் ஒருவரை விலங்கிட்டு போலிஸ் அழைத்துச் செல்லும் காட்சியை அந்தக் காணொளியில் காணமுடிந்தது. அட்லாண்டாவில் மார்ச் 16ஆம் தேதி உடற்பிடிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இது நடந்து ஒரு வாரத்திற்குள் கொலாராடோ துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இந்த ஏழு நாட்களுக்குள் ஏழு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. மார்ச் 17ல் கலிஃபோர்னியாவின் ஸ்டாக்டனில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 18ல் ஒரிகோனின் கிரிஷாமி, மார்ச் 20ல் ஹுஸ்டன், டல்லாஸ், ஃபிளடெல்ஃபியா ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன.

