நெகிரி செம்பிலான்: மலேசியத் துறைமுகத்தில் அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர். நேற்று 5.2 பில்லியன் ரிங்கிட் (S$1.7 பில்லியன்) மதிப்புள்ள 94.8 மில்லியன் 'கேப்டகன்' போதை மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
சிலாங்கூரின் கிள்ளான் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த எடை 16 டன் என்று சுங்கத்துறையின் நிர்வாக இயக்குநர் அப்துல் லத்திஃப் அப்துல் காதிர் தெரிவித்தார்.
எப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவ முறியடிப்பில் இது மிகப்பெரிய வெற்றியாகும் என்று திரு காதிர் கிள்ளானில் உள்ள சுங்கத்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலக அளவில் போதைப்பொருள்களை விநியோகித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் நடவடிக்கைகள் இதன்மூலம் முடக்கப்பட்டுள்ளது என்று திரு காதிர் தெரிவித்தார்.
தள்ளுவண்டிகளின் டயர்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த இந்தப் போதைப்பொருள் சரக்குகள் தூரக்கிழக்கு நாடுகளில் ஒரு நாட்டுக்கு கடத்தப்படவிருந்தாக அவர் கூறினார்.
மலாக்கா நீரிணையில் உள்ள மலாக்கா துறைமுகம் மலேசியாவின் ஆகப்பெரிய துறைமுகமாகும். இந்தத் துறைமுகத்திற்கு மத்திய கிழக்கில் இருந்து சரக்குக் கப்பல் ஒன்று வந்தது. அந்தக் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கொள்கலன்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது 12 மீட்டர் நீளமுள்ள மூன்று கொள்கலன்களில் ஏராளமான போதைப்பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது குறித்து சவூதி அரேபியா மலேசியாவுக்குத் துப்புக்கொடுத்ததன் மூலம் இந்தக் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டது என்றும் அதற்காக அந்த நாட்டுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் திரு காதிர் தெரிவித்தார். இந்த கடத்தல் முறியடிப்புச் சம்பவத்தில் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

