செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
13963b3b-fbff-417d-b4e2-24e92520b85b
-

தென்கொரிய அதிபர் ஆஸ்ட்ராஸெனிகா

தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சோல்: தென்கொரிய அதிபர் ஜூன் மாதம் பிரிட்டனில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தும் வகையில் அவர் நேற்று ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி போட்டுக்கொண்டார். திரு மூன், சோல் நகரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அருகேயுள்ள ஒரு சமூக மருந்தகம் ஒன்றுக்கு தனது மனைவி மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஒன்பது பேருடன் சென்று ஊசி போட்டுக்கொண்டார். அந்த அதிகாரிகள் அனைவருடன் அவருடன் பயணம் ஜி7 மாநாட்டிற்கு அதிபருடன் செல்ல இருப்பதாக தென்கொரிய அதிபர் மாளிகை, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க தென்கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

பிரிட்டன்: சரியான காரணமின்றி வெளிநாடு செல்வோருக்கு $9,000 அபராதம்

லண்டன்: இங்கிலாந்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், சரியான காரணங்களின்றி வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு $9,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தச் சட்டம் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும். பிரிட்டனில் இப்போது வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்குப் பதிலாக அடுத்த வாரம் முதல் புதிய சட்டம் நடப்புக்கு வரும். மூன்றாவது அலை தலையெடுக்காமல் இருந்தால் விடுமுறைச் சுற்றுலா நடவடிக்கைகள் மே 17ஆம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்தது.

மியன்மாரில் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம்

யங்கூன்: மியன்மாரில் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர். யங்கூன் நகரில் நூற்றுக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்ற காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் காணமுடிந்தது. ராணுவத்தைக் கண்டித்து நடந்துவரும் போராட்டத்தில் இதுவரை 261 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்களை துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறையைக் கையாண்டு கொன்று குவித்தது ராணுவம். அதைக் கண்டிக்கும் வகையில் ராணுவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், திங்கட்கிழமை பொருளியல் தடைகளை விதித்தது.