'அன்வார் கட்சியுடன் கூட்டணி இல்லை'

'அன்வார் கட்சியுடன் கூட்டணி இல்லை'

2 mins read
c8df9b78-c3d9-4b4a-b711-01507091fa1b
அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி. படம்: தி ஸ்டார் நாளிதழ் -

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான அன்வார் இப்ராஹிமின் கெஅடிலான்(பிகேஆர்) கட்சியுடன் தமது கட்சி கூட்டணி வைக்காது என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிடுவது குறித்து ஆலோ சிக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். வரப்போகும் தேர்தலில் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் மட்டுமே அம்னோ இணைந்து போட்டியிடும். தேர்தலுக்குப் பிறகே பிகேஆர் கட்சியுடன் சாத்தியமான உடன்பாடு குறித்து ஆராயப்படும் என்று திரு ஸாஹிட் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க் கிழமை செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், அம்னோவுடன் கூட்டு சேருவது குறித்து பேசி வருவதாக அறிவித்தார். இது, மலேசிய அரசியலில் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதிக்கவில்லை என்று திரு ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார். "ஆம், நாடாளுமன்றத்திலும் திருமண நிகழ்ச்சிகளிலும் அன்வாரை நேருக்கு நேர் சந்தித்துள்ளேன். ஆனால் அதிகாரபூர்வமாகவோ அதிகாரபூர்வமற்றோ எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை. "என்னுடன் மட்டுமல்ல, அம்னோ துணைத் தலைவர் முகம்மது ஹசனுடன்கூட பேச்சு நடக்கவில்லை," என்றார் அவர். இம்மாதம் 27, 28 தேதிகளில் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில் ஸாஹிட் தமது கட்சியின் நிலைப் பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். 1973ல் அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் அம்னோ அங்கம் வகித்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இதே கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்டு வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பெர்சத்துக் கட்சியுடன் கூட்டணி வைக்காது என்று பிப்ரவரி 19ஆம் தேதி அம்னோ அறிவித்தது. தற்போதைய ஒத்துழைப்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் முடிவுக்கு வரும் என்று அம்னோ கூறியிருந்தது.