சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையும் அதன் காரணமாக ஏற்பட்ட கட்டுக்கடங்கா வெள்ளமும் சவுத்வேல்ஸ் மாநில மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை, உடமைகளை விட்டு, பிள்ளை குட்டிகள், செல்லப்பிராணிகள், மூத்தோர் என தத்தம் குடும்பத்தினரை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க படாதபாடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பல நகரங்களில் வீடுகள், சாலைகள், பாலங்கள், விவசாய நிலங்கள் ஆகியவை நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐம்பது ஆண்டுகள் காணாத அளவுக்குப் பெய்த கனமழையாலும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தாலும் 40,000க்கு மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டது. இரண்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி மாண்டனர். அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
ஐந்து நாட்களாக விடாமல் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் அணை உடைந்து வசிப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் மக்கள் சற்றுப் பெருமூச்சு விடும் வகையில், அவர்களை அச்சுறுத்தி வந்த கன மழை ஓய்ந்து வானம் தெளிவான நிலையில் காணப்படுகிறது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும் ஆற்றோரம் உள்ள நீர்ப்பிடிப்பு நிலப்பகுதிகளில் தேங்கிய நீர் இன்னும் வடியவில்லை. அத்துடன் அப்பகுதிகளை நோக்கி வெள்ள நீர் வந்த வண்ணம் உள்ளதாகவும் அதிகாரிகள் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் சில பகுதிகளில் ஆறுகள் நிரம்பி அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் தெரிவித்தன. குறிப்பாக சவுத்வேல்ஸ் மாநில மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இப்போது வானம் தெளிந்த நிலையில் கதிரவன் ஒளி பரப்பினாலும் நாம் ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய வானிலை நிலையம் ஓர் அறிக்கையில் எச்சரித்துள்ளது. மோரீ நகரின் மெஹி ஆற்றின் வெள்ளநீர்ப் பெருக்கு அந்த நகரையே இரண்டாகப் பிரித்துவிட்டது.
மெஹி ஆற்றில் தண்ணீர் நிலை 10.4 மீட்டர் அளவை எட்டக்கூடும் என்றும் அதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

