வெல்லிங்டன்: அவசரமாக வெளிநாடு போகவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.
நியூசிலாந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டது. முதல் கட்டமாக நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதில் தொற்று பாதிப்புக்கு ஆளாவோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டு மக்கள் முக்கியமான காரணங்களால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனமாக ஆலோசித்தது இந்த அனுமதியை வழங்கியுள்ளது என்றார் பிரதமர் ஹிப்கின்ஸ்.
இப்போது குறிப்பாக தொற்றுக்கு எளிதில் பாதிப்படையக்கூடியவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, வெளிநாடு செல்லும் அனைவருக்கும் அவசரமாக தடுப்பூசி போடுவது சாத்தியமாகாது.
அதேவேளையில் சரியான, கருணை அடிப்படையில் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சலுகை, வெளிநாடுகளில் இருந்து புதிதாக வருகை மேற்கொள்பவர்களுக்கும், அவ்வாறு வருகை தந்தபின் வெளிநாடுகளுக்குத் திரும்புபவர்களுக்கும் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
முன்னுரிமைச் சலுகை பெறுவோர், நியூசிலாந்தில் இருந்து வெளியேறுவதற்குமுன் தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் ஹிப்கின்ஸ் கூறினார்.

