செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3322008d-f8e0-4b20-8e7b-fc8cdba6d94b
-

ஜப்பானுக்கு அருகே ஏவுகணைகள்

பாய்ச்சியது வடகொரியா

தோக்கியோ: வடகொரியா நேற்று இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு அருகேயுள்ள கடலுக்குள் பாய்ச்சி சோதனை மேற்கொண்டது. பைடன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் சூழலில் பதற்றத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் வடகொரியா இந்த ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் சுகா கூறினார். முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் ஏவுகணைச்சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், வடகொரியாவைக் கட்டுப்படுத்துவது பைடன் நிர்வாகத்திற்குப் புதிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வடகொரியாவின் இந்தப் போக்கு அண்டை நாடுகளுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்கா ராணுவத்தின் இந்தோ-பசிபிக் தளபத்தியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அது வடகொரியாவின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்து வருவதோடு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறியது. இந்தச் சம்பவம் தென்கொரியாவும் கவலை தெரிவித்துள்ளது.

மலேசியத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

கோலாலம்பூர்: மலேசியாவின் புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் போலிஸ் பிரிவினரால் கடந்த ஆண்டு ஜனவரியில் கைதுசெய்யப்பட்ட கடன் முதலை ஒருவர், மலேசியாவின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்வதற்கு முன்னர் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அந்தக் கடன் முதலை இலக்கு கொண்டிருந்தார். அவருடைய கொலை சதித்திட்டப் பட்டியலில் அப்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது, நிதியமைச்சர் லிம் குவான் எங், அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவா, தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர், மலேசியத் தலைவர்கள் சிலரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதை மலேசியாவின் மூத்த துணை ஆணையாளர் அஸ்மான் ஒமார் நேற்று நடந்த ஒரு இஸ்லாமியக் கருத்தரங்கில் தெரிவித்தார்.