சூயஸ் கால்வாயில் கப்பல் தரை தட்டிய விவகாரம்
இஸ்மாயிலியா: சூயஸ் கால்வாயில் மிகப் பெரிய கொள்கலக் கப்பல் தரை தட்டியதால் ஆப்ரிக்க கண்டத்தை தாண்டிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் கப்பல்கள் இருக்கின்றன.
இதற்குக் காரணம் அந்தக் கப்பலை மீட்டு கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து வர பல வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுவதே.
சூயஸ் கால்வாய் உலகின் ஆகப் பெரிய கடற்துறை போக்குவரத்துத் தடம். இதன் வழியாகத்தான் எரிபொருள் முதல் உற்பத்தியான பொருட்கள் வரை பல நாடுகளுக்குச் செல்கின்றன.
செவ்வாய்க்கிழமை தரை தட்டிய கப்பலை மீட்டு கடல் பயணத்தைத் தொடர வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
அதிலுள்ள கொள்கலன்களை அப்படியே வைத்திருக்க முடியுமான னால் அந்தப் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து அடுத்த வியாழக்கிமைக்குள் கப்பலை மீண்டும் நீரில் மிதக்க விடலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் இருப்பதாக புளூம்பெர்க் செய்தித் தகவல் கூறுகிறது.
மாறாக, கப்பலிலுள்ள கொள்கலன்கள் இறக்கி வைக்கப்பட வேண்டி வரலாம். அல்லது கால்வாயில் பெரிய அளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.
இப்படி நடக்குமானால் கப்பலை மிதக்கவிட இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் திரவ இயற்கை எரிவாயு ஏந்தி அட்லாண்டிக் கடற் பகுதியில் வரும் இரு கப்பல்கள்
சூயஸ் கால்வாயில் தேங்கி நின்றுவிடாமல் இருக்க ஆப்ரிக்க கண்டத்தை நோக்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், செங்கடல் பகுதிக்கு அப்பாலுள்ள கப்பல்கள் ஆப்ரிக்க கண்டத்தை சுற்றிச் செல்வது குறித்து ஆராய்ந்து வருவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறு நேர்ந்தால் கடற் பயணம் கூடுதலாக 10லிருந்து 15 நாட்கள் வரை அதிகரிக்கலாம் என்றும் செலவும் அதற்கேற்றாற்போல் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஆப்ரிக்க கண்டத்தை கப்பல் பயணம் சுற்றி வர கூடுதலாக ஆகக்கூடிய செலவு பற்றி விசாரித்து வருவதாக புளூம்பெர்க் செய்தி கூறுகிறது.
இந்நிலையில், ஆப்ரிக்க கண்டத்தை சுற்றிச் செல்ல முடிவெடுக்கும் முன் சூயஸ் கால்வாய் எவ்வளவு காலம் இப்படிக் கப்பல் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்பதை ஆராயும் திட்டத்தில் கப்பல் நிறுவனங்கள் காத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

