ஆங் சான் சூச்சி கட்சி
அலுவலகம் மீது குண்டுவீச்சு
யங்கூன்: மியன்மாரில் ராணுவத்திடம் ஆட்சியை இழந்த நிலையில், அவரது கட்சி அலுவலகம் மீது நேற்று எரிகுண்டு வீசப்பட்டதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
அந்நாட்டில் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி இரவு மின்னல் வேகத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தியது. அதன்பின் அங்கு தொடர் போராட்டங்களால் நாடு கொந்தளிப்பில் உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் மீண்டும் ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று கோரி ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க ராணுவம் வன்முறையில் இறங்கியுள்ள வேளையில், சூச்சி அம்மையாரின் கட்சி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4.00 மணிக்கு அவரது தேசிய ஜனநாயக இயக்கக் கட்சி அலுவலகம் மீது எரிகுண்டு வீசப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி விளக்கியது.
தாய்லாந்து: தடுப்பூசி போட்ட ஒரு வாரத்தில் ஆடவர் மரணம்
பேங்காக்: தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆடவர் அதற்குப் பின் ஒரு வாரத்தில் மரணம் அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. அந்த ஆடவரின் இறப்புக் காரணம் இதயத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த நாளம் வெடித்ததால் ஏற்பட்டது என்று கூறும் அந்நாட்டு அதிகாரிகள் தடுப்பூசி போடுவது தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த ஆடவர் மார்ச் மாதம் 3ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் மார்ச் 13ஆம் தேதி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்துரைத்த டாக்டர் சோப்போன் என்பவர், "அவருடைய மரணத்துக்கு காரணம் ரத்த நாள வெடிப்பு தானே தவிர தடுப்பூசி அல்ல என நான் நம்புகிறேன்," என்றார்.
ஒருவரின் இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளம் வெடித்தால் அது மரணத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

