பெய்ஜிங்: உலகப் புகழ்ெபற்ற நிறுவனங்களான அடிடாஸ், நைக்கிக்கு அடுத்ததாக எச்அண்ட்எம் நிறுவனமும் சீனாவின் புறக்கணிப்பை எதிர்நோக்குகிறது.
இவ்வாரம் முற்பகுதியில் எச்அண்ட்எம் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சீனாவின் இணையத் தளங்கள் அறைகூவல் விடுத்தன. அடுத்த சில நாட்களிலேயே ஆடை அலங்கார நிறுவனமான 'எச்அண்ட்எம்' சீனாவின் விற்பனைத் தளங்களிலிருந்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் கடைகளும் சீனாவின் வரைபடங்களிலிருந்து காணாமல் போனது. எச்அண்ட்எம் நிறுவனத்துக்கு ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தாக சீனாதான் 4வது பெரிய சந்தையாகும்.
ஸின்ஜியாங்கில் உய்கர் இனத்த வருக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பாக பெய்ஜிங்குக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களை சீனா புறக்கணித்து வருகிறது. 2020 மார்ச் மாதத்தில் எச்அண்ட்எம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி ஸின்ஜியாங்கில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியை அறநிறுவனம் புறக்கணிப்பதாக கம்யூனிச இளையர் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் ஸின்ஜியாங்கில் தொழிலாளர்கள் கட்டாயப் படுத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்து எச்அண்ட்எம் கவலை தெரிவித்திருந்தது.
ஸின்ஜியாங்கில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உய்கர் இனத்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வட்டாரத்தில் அதிகாரிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடு வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. ஆனால் இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை தேவை என்று அது தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே ஒரே சந்தையை மட்டும் நம்பியிருப்பது ஆபத்தானது என்று பொருளியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

