'அம்னோ அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் ஷாரியா இஸ்லாமிய சட்டம் வலுப்படுத்தப்படும்'

'அம்னோ அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் ஷாரியா இஸ்லாமிய சட்டம் வலுப்படுத்தப்படும்'

1 mins read
ba4b7881-0f92-417f-9ce2-e569e17ff41a
அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி. படம்: தி ஸ்டார் நாளிதழ் -

மலேசியாவில் நடைபெற இருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் நாட்டில் ஷாரியா இஸ்லாமிய சட்டம் வலுப்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2023ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால் பிரதமர் முகைதீன் யாசினுக்குப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று அடிக்கடி கூறப்படுவதால் பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் அல்லாதவர்களும் தங்கள் சமய நூல்களில் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அண்மையில் மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து திரு ஸாஹிட் அதிருப்தி தெரிவித்தார்.

அது ஷாரியா இஸ்லாமிய சட்டத்தை முடக்கிவிடும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, அம்னோவின் உண்மையான பங்காளியாக, அம்னோவுடன் நேர்மையுடன் இருக்கும்படி பாஸ் கட்சியை திரு ஸாஹிட் கேட்டுக்கொண்டார்.

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும் அவருடனான கூட்டணியிலிருந்து வெளியேறுமாறும் திரு ஸாஹிட் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து அவர் அம்னோவின் வருடாந்திரக் கூட்டத்தில் இன்று பேசிக்கொண்டிருந்தபோது பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அதே மேடையில் விருந்தினர் என்கிற முறையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.