செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
0cc0ceff-8395-41d0-897c-45498ec27dd8
-

அமெரிக்காவில் 91 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் வேகமெடுத்து வருகிறது. அந்நாட்டில் நேற்று முன்தின நிலவரப்படி 91 மில்லியனுக்கு மேற்பட்டோர் குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் பெரியவர் மக்கள்தொகையில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகும். மே 1க்குள் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறச் செய்ய அதிபர் ஜோ பைடனின் உத்தரவை நிறைவேற்ற கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் உறுதி கூறியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒருவருக்குத் தொற்று

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் பரவிவரும் 'பி117' வகை கிருமி அந்த ஆடவரைத் தொற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நிலவனப்புத் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை தொற்று உறுதியானது. அவருடன் மேற்கூறப்பட்ட அந்த ஆடவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைமைச் சுகாதார அதிகாரி ஜெனட் யங் நேற்று கூறினார். இவ்விருவர் போக வேறொருவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. குவீன்ஸ்லாந்தில் மாநிலம் தழுவிய முடக்கநிலையை அமல்படுத்துவதற்கான தேவை இப்போது இல்லை என்று டாக்டர் யங் சொன்னார்.