அமெரிக்காவிலேயே முதல்முறையாக நியூயார்க் மாநிலத்தில் கொவிட்-19 மின்னிலக்க அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களின் தடுப்பூசி பற்றிய விவரங்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அந்த முடிவும் அதில் இடம்பெற்று இருக்கும்.
நியூயார்க்கில் விரைவில் வர்த்தகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு விடுதிகளை திறக்கும் நோக்கத்தில் புதிய செயலி அறிமுகம் கண்டுள்ளது.
'ஐபிஎம்' நிறுவனத்துடன் சேர்ந்து நியூயார்க் உருவாக்கிய செயலி 'Excelsior Pass' என அழைக்கப்படுகிறது.
விமானப் பயணச் சீட்டுகளை போலவே கைபேசி செயலியைக் காட்டி தேவையான இடங்களில் நுழையலாம்.
பயனீட்டாளர்களுக்கு 'கியூஆர்' குறியீட்டுடன் மின்னிலக்கச் அட்டை வழங்கப்படும். இதன்படி அந்த அட்டையை வைத்துக் கொள்ளலாம் அல்லது கைபேசியில் சேகரித்து வைக்கலாம். இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள வர்த்தகர்கள் அந்த 'கியூஆர்' குறியீட்டை வருடி வாடிக்கையாளர்களின் தடுப்பூசி தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
பொதுமக்களின் தரவுகள் மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்கப்படும் என்று நியூயார்க் உறுதியளித்துள்ளது.
"பொதுமக்களின் சுகாதாரம் முக்கியமா, பொருளியல் முக்கியமா என்று கேட்டால் இரண்டுமே முக்கியம்," என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு குவோமோ தெரிவித்தார்.
பைடன் நிர்வாகம், தனியார் துறையினர் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் தடுப்பூசி கடப்பிதழைத் தயாரிக்கும் முயற்சிகளை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. அவை குறிப்பிட்ட தரத்தில் இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது என்று வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் செயல்களை ஒருங்கிணைக்கும் பேச்சாளர் ஜெப்ஃரி ஸியனண்ட்ஸ் இம்மாதம் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
புதிய கொவிட்-19 செயலியை அரங்கத்தில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண விருந்து நிகழ்ச்சிகள் அல்லது இதர சமூக ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்க பயன்படுத்தலாம்.
நியூயார்க் நகரத்தில் 20,000 இருக்கைகளைக் கொண்ட மடிசன் ஸ்கொயர் கார்டன், வரும் வாரங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக உறுதி தெரிவித்துள்ளது.
தொடக்கமாக ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து சிறிய கலை, பொழுதுபோக்கு நிலையங்களில் இந்தச் செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

