சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான இருதரப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணம் மேற்கொள்வோர் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஹாங்காங் பரிந்துரை செய்திருக்கிறது.
தாமதமான ஹாங்காங்-சிங்கப்பூர் இருதரப்புப் பயண ஏற்பாடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இருதரப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணம் செய்யும் ஹாங்காங்வாசிகள் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அதன்பின் குறைந்தது 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் பயணம் செய்ய முடியும் என்றும் ஹாங்காங் வர்த்தக, பொருளியல் மேம்பாட்டு அமைச்சர் எட்வர்ட் யாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இந்தப் பரிந்துரையை முன்மொழிந்துள்ளோம். அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். ஆயினும், முதலில் ஹாங்காங்கில் நாம் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, இங்கிருந்து சிங்கப்பூர் செல்ல விரும்புவோர், தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்," என்று திரு யாவ் சொன்னார்.
கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில், ஹாங்காங்கின் வாராந்திர சராசரி ஐந்துக்கும் கீழே குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்க இதுவே அடிப்படை நிபந்தனை.
"ஹாங்காங் மக்கள் பயணம் செய்வதாக இருந்தால், மற்ற நாடுகளுடன் இருதரப்புப் பயண ஏற்பாட்டைச் செய்துகொள்வதாக இருந்தால், தடுப்பூசி கட்டாயத் தேவையாக இருக்கும். இது நமது பாதுகாப்பிற்காகத்தான். நீண்டகால அடிப்படையில் உலகில் அத்தகைய போக்கே இருக்கும் என நம்புகிறேன்," என்றார் திரு யாவ்.
இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் புறப்பாட்டிற்கு முன்னரும் வந்து சேர்ந்த பின்னரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சிங்கப்பூரும் ஹாங்காங்கும் முதலில் உடன்பாடு செய்துகொண்டுள்ள நிலையில், கட்டாயத் தடுப்பூசிப் பரிந்துரையை ஹாங்காங் இப்போது முன்மொழிந்துள்ளது.

