ஆஸ்திரேலிய அமைச்சர்கள் நீக்கம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச் சாட்டுகளில் சிக்கிய இருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அமைச்சரவையை மாற்றியமைத்த பிரதமர் ஸ்காட் மோரிசன், தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பிலிருந்து கிறிஸ்டியன் போர்டெரை (வலம்) நீக்கியுள்ளார். இதே போன்று தற்காப்பு அமைச்சர் லிண்டா ரினால்ட்சும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இருவரும் அமைச்சரவையில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. திரு போர்ட்டர், 1988ல் தனக்கு 17 வயதாகும்போது ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை லிண்டா ரினால்ட்ஸ் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் கண்டனம்
வாஷிங்டன்: மியன்மார் ராணுவத்தின் அட்டூழியத்தை உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். இதனை மியன்மார் ராணுவத்தின் மூர்க்கத்தனமான செயல் என்று திரு பைடன் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளும் மியன்மாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

