யங்கூன்: மியன்மாரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பையும் அடக்குமுறையையும் கண்டித்து அமைதியான வழியில் போராடி வந்த போராட்டக்காரர்கள் இப்போது தெருக்களில் குப்பை கொட்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் நேற்று மியன்மாரின் முக்கிய நகரத்தின் தெருக்களில் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து வருகின்றன.
இந்நிலையில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் மாண்டோர் எண்ணிக்கை 500ஐத் தாண்டியது. நேற்று முன்தினம் மட்டும் மியன்மாரில் பொதுமக்களில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்றும் யங்கூன் மாநிலத்தின் தெற்கு டேகோன் மாவட்டத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்புப் படையினர் வலுமிகு துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகீறது.
கூட்டத்தைக் கலைப்பதற்காகவும் வன்முறையைக் கையாளும் பயங்கரவாதப் பேர்வழிகளை ஒடுக்குவதற்காகவும் பாதுகாப்புப்படை கலகத் தடுப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் கையாண்டதாக அரசாங்கத் தொலைக்காட்சி ஒன்று கூறியது.
தெற்கு டேகோன் மாவட்ட குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், அப்பகுதியில் நீண்ட நேரம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகக் கூறினார். எனவே, அதிகமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
இந்நிலையில் மியன்மாரில் ராணுவம் மக்களைக் கொன்று குவிக்கும் போக்கை நிறுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு ராணுவத் தலைவர்களை ஐநா அமைப்பின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாடுகளின் கண்டிப்பு, வர்த்தகத் தடை ஆகியவை ராணுவத்தின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. திருவாட்டி சூச்சி அம்மையார் யாரும் அறியாத வகையில் எங்கோ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதே போல் அவருடைய அமைச்சரவை சகாக்களும் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
வார இறுதியில் தாய்லாந்து எல்லையில் ராணுவத்தினருக்கும் 'கேரன் நேஷனல் யூனியன்' (கேஎன்யூ) என்னும் சிறுபான்மையினரின் படை வீரர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது.
அந்தச் சண்டையில் ராணுவத்தினர், கேஎன்யூ படையினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக ஒரு பொதுநலக்குழு ஒன்றும் ஊடகம் ஒன்றும் தெரிவித்தன. அந்தச் சண்டையை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடி ஓடியதாகக் கூறப்படுகிறது.

