கோலாலம்பூர்: அம்னோவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய வேண்டுமெனில் உடனடியாக கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் இளையர் பிரிவுத் தலைவரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுத்தேர்தலுக்குப் பிறகு கட்சித் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது, அது உடனடியாக நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கட்சிக்குள் இருக்கும் நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்றும் திரு கைரி நேற்று தனது இன்ஸ்டகிராம் பதிவில் கூறியுள்ளார்.
இப்போதைய சூழலில் அம்னோ இரண்டு பிரிவுகளாக உள்ளது என்றும் ஒரு பிரிவு கட்சித் தலைவர் அஹ்மது ஸாகித் ஹமிடி தலைமையிலும் இன்னொரு பிரிவு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அனுவார் மூசா தலைமையிலும் உள்ளதாகவும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் முகைதீனின் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ள கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த பொதுத்தேர்தலை தனித்து எதிர்கொள்ள அம்னோ தயாராக இருப்பதாகவும் ஸாகித், வார இறுதியில் நடந்த கட்சியின் ஆண்டு மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பெரிக்காத்தான் நேசனல் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்ள விரும்பும் ஸாகித் ஆதரவாளர்களிடம் அம்னோவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு நஜிப் ரசாக்குக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

