பெய்ஜிங்: ஹாங்காங்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் சீர்திருத்தத்திற்கு சீனாவின் உயர்மட்ட சட்டக்குழு ஒருமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தச் சீர்திருத்தம் மூலம் தேர்தலில் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்குப் பாதியாகக் குறைக்கப்படுவர்.
புதிய சட்டத்திருத்தத்தின்படி 20 உறுப்பினர்கள் மட்டுமே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தச் சட்டத்திருத்தம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது. 167 சட்டமன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் புதிய சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சீன அதிபர் ஸி ஜின்பிங் கையெழுத்திட்டுள்ளார்.
ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட போது, ஹாங்காங் தன்னிச்சையாக இயங்குவதற்கு சீனா உறுதியளித்திருந்தது. இப்போது தேர்தல் முறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கை சுயாட்சிக்கு எதிரான நேரடித்தாக்குதல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறியுள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கை, சீனா-பிரிட்டிஷ் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை சீனா மீண்டும் மீறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ரேப் கூறியுள்ளார்.

