நியூயார்க் நகரில் பட்டப்பகலில் பிலிப்பீன்ஸ் மாதைத் தாக்கிய ஆடவர்

நியூயார்க் நகரில் பட்டப்பகலில் பிலிப்பீன்ஸ் மாதைத் தாக்கிய ஆடவர்

2 mins read
8c2c6b3b-ccd5-440c-b934-40a75a31c279
கண்காணிப்புக் கருவியில் பதிவான இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் காணப்படும் இந்த ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகே வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த 65 வயது பிலிப்பீன்ஸ் மாது ஒருவரை ஆடவர் ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்தச் சம்பவம் பட்டப்பகலில் நிகழ்ந்தது.

அந்த மாது நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர் எதிரே வந்த ஆடவர் அந்த மாதின் வயற்றில் உதைத்தார். இதனால் அந்த மாது நடைபாதையில் சுருண்டு விழுந்தார். அந்த ஆடவரின் அட்டூழியம் அதோடு நின்றுவிடவில்லை. தரையில் கிடந்த அந்த மாதை தலையில் மூன்று முறை அந்த ஆடவர் அடுத்தடுத்து உதைத்தார்.

அந்த மாதைத் தாக்கியது மட்டுமல்லாமல் அவரைத் தகாத வார்த்தைகளால் அந்த ஆடவர் திட்டியதாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த மாதிடம் "நீ இங்கு சேர்ந்தவள் அல்ல," என்று அந்த ஆடவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதலைக் காட்டும் காணொளியை நியூயார்க் போலிஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் (மார்ச் 29) வெளியிட்டனர். இந்தக் காணொளி, பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கிறது.

பட்டப்பகலில் அந்த மாதை அந்த ஆடவர் தாக்கியது நெஞ்சை பதறவைக்கிறது என்றால், அங்கிருந்த வழிப்போக்கர்கள் இந்தக் கொடூரத்தை நேரில் கண்டும் காணாமலும் இருந்தது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் ஆசியர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இன வெறுப்புணர்வு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தாங்கள் வெளியில் செல்லும்போது எந்நேரமும் தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகக்கூடுமோ என்று ஏற்கெனவெ பீதியுடன் வீதியில் செல்லும் ஆசிய-அமெரிக்கர்களை இச்சம்பவம் திடுக்கிட வைக்கிறது.

இணையத்தில் இந்தக் காணொளி வேகமாகப் பரவிவரும் வேளையில், அரசாங்க அதிகாரிகள் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் தடுமாறி வருவது இந்தக் காணொளியைக் காண்பவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

நேற்று முன்தினம் (மார்ச் 29) நிகழ்ந்த இந்தத் தாக்குதலை நியூயாரக் நகர மேயர் பில் டி பிளாசியோ "அருவருப்பானது, கொடுமையானது" என்று வர்ணித்தார். முக்கியமாக, இத்தகைய தாக்குதல்களை நேரில் காணும் நியூயார்க்வாசிகள் இவற்றில் தலையிட்டு இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தாக்குதலைக் கொடூரமானது என்று வர்ணித்த நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, இதை விசாரிக்க மாநில போலிசாருக்கு உத்தரவிட்டார்.

இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி அந்த ஆடவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்