யங்கூன்: மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. ராணுவத்தின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் ஆர்ப் பாட்டக்காரர்கள் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பரித்தனர்.
இவ்வேளையில் தனது தூதரகத்தில் உள்ள அவசியமற்ற ஊழியர்கள் மியன்மாரைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் குறைந்தது 521 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்தனர் என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமையன்றும் எட்டுப் பேர் மாண்டனர் என்று அச்சங்கம் கூறியது.
ராணுவத்தின் ஊரடங்கையும் மீறி நேற்று முன்தினம் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
நேற்று விடியற்காலையில் பேரணியும் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்ததிலிருந்து மியன்மாரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது.
எல்லையோரங்களில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் எல்லைப்பகுதிகளில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தாய்லாந்தை எல்லையாகக் கொண்ட கிழக்கு எல்லையோரம் வசிக்கும் காரென் தேசிய கிளர்ச்சியாளர்கள் குழு, மியன்மார் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.
மியன்மாரிலிருந்து தப்பியோடும் காரென் மக்களுக்கு குறிப்பாக தாய்லாந்து அடைக்கலம் தர வேண்டும் என்றும் மியன்மார் ராணுவத்துடனான உறவை அனைத்துலக நாடுகள் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

