மலேசிய அவசரகால
சட்டத்தில் திருத்தம்
கோலாலம்பூர்: மலேசிய அவசரகாலச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல் புதிய செலவுகளை அனுமதிக்கும் வகையில் இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி பிரதமர் முகைதீன் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம், நிதி அமைச்சின் ஒப்புதலை மட்டும் பெற்று அரசாங்க நிதியைப் பயன்படுத்த முடியும்.
கொரோனா கிருமி; சீனா மறுப்பு
பெய்ஜிங்: கொவிட்-19 கிருமியின் மூலத்தைக் கண்டறிவதற்காக சீனாவில் உள்ள வூஹான் நகருக்குச் சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் கொள்ளைநோய் தொடர்பான தரவுகளை அப்போது சீனா பகிர்ந்துகொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறினர். இதனை சீனா மறுத்துள்ளது. இது குறித்து பேசிய சீனாவின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், ஆய்வாளர்களின் கூற்றுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை என்றார்.
வூஹான் நகரில்தான் முதல் முறையாக கொரரோனா கிருமி அடையாளம் காணப்பட்டது. ஆரம்பத்தில் நோய் எங்கிருந்து பரவியது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பன உள்ளிட்ட தரவுகளை சீனா பகிர்ந்துகொள்ள வில்லை எனக் கூறப்படுகிறது. இத்தகைய தரவுகள், எதிர்காலத்தில் கொள்ளைநோய் பரவலைத் தடுக்க உதவியாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கிறது.
'சூச்சி ஆரோக்கியமாக உள்ளார்'
யங்கூன்: மியன்மாரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு உள்ள ஆங் சான் சூச்சியுடன் காணொளியில் பேசியபோது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
"அமே ஆரோக்கியமாகக் காணப்படுகிறார்," என்று ஆங் சான் சூச்சியை தாயார் என அடைமொழியில் குறிப்பிட்டு வழக்கறிஞர் மின் மின் சோ தெரிவித்தார்.

