மலேசியாவின் ஆக வயதான பெண்மணியான திருவாட்டி அன்னம்மா அபுகுட்டி நேற்று தமது 110வது பிறந்தநாளைக் கொண்டாடியபோதும் தமது சமூகப் பங்களிப்பை இன்னும் நிறுத்தாமல் தொடர்கிறார்.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த திருவாட்டி அன்னம்மா இரண்டாம் உலகப் போரின்போது மலாயாவிற்கு இடம்பெயர்ந்தார்.
இப்போது பேராக் மாநிலம், பத்து காஜாவில் நான்கு பிள்ளைகள், 17 பேரப் பிள்ளைகள், ஏழு கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் இவர் வசித்து வருகிறார். இடது கண் பார்வையை இழந்து விட்ட இவர், தற்போது சக்கர நாற்காலியிலேயே முடங்கிவிட்டார். ஆயினும், தமிழ், மலாய் மொழிகளில் நன்கு பேசும் இவருக்கு நினைவாற்றலும் நன்றாகவே இருக்கிறது.
இத்தனை வயதாகிவிட்டாலும் உடற்குறை இருந்தாலும் அக்கம் பக்கத்தினரும் நோயாளிகளும் சுகாதாரம், நீண்டகாலம் வாழ்வது குறித்த ஆலோசனைகளைப் பெற தம் தாயாரை நாடி வருவது தொடர்வதாக இவரின் மகன் திரு எம்.சுப்பிரமணியம், 73, பெருமிதத்துடன் கூறினார்.
மூலிகை மருத்துவத்தோடு பேறுகால மருத்துவம், உடலைத் தளர்த்துதல், பச்சை குத்துதல் போன்றவை தொடர்பிலும் திருவாட்டி அன்னம்மா ஆலோசனை அளித்து வருகிறார்.
"இங்குள்ள மக்கள் எங்கள் தாயாரை 'பாட்டி அன்னம்மா' என அன்போடு அழைக்கின்றனர்," என்றார் திரு சுப்பிரமணியம்.
நோன்பு, தியானம், வீட்டிலேயே வளர்த்துவரும் மூலிகைகள் ஆகியவையே தம் தாயாரின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று அவர் குறிப்பிட்டார்.முன்னதாக, மலேசியாவின் ஆக வயதான பெண்மணி எனும் சாதனையைப் படைத்து 'மலேசிய சாதனைப் புத்தகத்தில்' இடம்பெற்றார் திருவாட்டி அன்னம்மா. அதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டஃபர் வோங் நேற்று முன்தினம் திருவாட்டி அன்னம்மாவிடம் வழங்கினார். கடந்த ஆண்டும் இச்சான்றிதழை இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது