ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவில் 23 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயம் அடைந்தனர். ஐவர் காணவில்லை. தீமோர் லெஸ்ட்லியிலும் எட்டுப் பேர் மாண்டனர். ஃபுளோர் தீவில் குறைந்தது 49 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக பேரிடர் நிர்வாக முகவையின் பேச்சாளர் ரதிட்யா தெரிவித்தார்.
லாமனெலி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் புதைந்ததாகவும் குடியிருப்பாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தீமோர் லெஸ்ட்லி தலைநகர் திலியில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். கடும் மழை காரணமாக திலியில் உள்ள அதிபர் மாளிகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து திலியில் தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை தொடரும் என எதிர் பார்க்கப்படுவதால் சேதம் அதி கரிக்கும் என அஞ்சப்படுகிறது.

