பேங்காக்: கொவிட்-19 தொற்று மீண்டும் பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்தும்விதமாக தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தலைநகர் பேங்காக்கிலும் மற்ற 40 மாநிலங்களிலும் மதுக்கூடங்கள், கரவோக்கே, உடற்பிடிப்பு சேவை நிலையங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு, கேளிக்கை நிலையங்களை வரும் 23ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் நிலைமை மேம்பட்டால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 சூழல் நிர்வாக மையப் பேச்சாளர் தவீசில்ப் விசனுயோதின் கூறினார்.
தாய்லாந்தில் அடுத்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவி வருவது பொருளியலைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறது. அத்துடன், தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினருக்குச் சுற்றுலாத் தலங்களைப் படிப்படியாகத் திறந்துவிடும் திட்டங்களும் தாமதமாகலாம்.
தாய்லாந்தில் இம்மாதத்தில் மட்டும் புதிதாக 2,000 பேருக்கு மேல் கிருமி தொற்றிவிட்டது.
இதையடுத்து, மேலும் பத்து மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யும்படி அரசாங்க அமைப்புகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பிரதமர் பிரயுத் சான் ஓ சா உத்தரவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 45 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட தாய்லாந்து இலக்கு கொண்டுள்ளது.
இதனிடையே, கொரோனா பரிசோதனைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய அளவில் மருத்துவச் சாதனங்கள் வந்து சேராததால் பேங்காக்கில் குறைந்தது 12 மருத்துவமனைகள் பரிசோதனையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.