யங்கூன்: மியன்மார் ராணுவத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ள அந்நாட்டிற்கான ஐநா தூதர், அந்நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"உங்களது கூட்டு, வலுவான நடவடிக்கையே உடனடித் தேவை," என்று ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசிய திரு கியாவ் மோ டுன், ஆயுத இறக்குமதிக்கும் மியன்மார் ராணுவத்தின்மீதும் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்துலகச் சமூகம், குறிப்பாக ஐநா பாதுகாப்பு மன்றம் போதிய, வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் குடியிருப்புப் பகுதிகளில் ராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்கலாம் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, பாகோ நகரில் நேற்று முன்தினம் இரவும் நேற்று அதிகாலையிலும் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அல்ஜசீரா செய்தி தெரிவித்தது.
இதனிடையே, ராணுவ கேப்டனின் உதவியாளர் ஒருவரைக் கொன்றதற்காக 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

