லண்டன்: இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இம்மாதம் 17ஆம் தேதியன்று நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அரச குடும்பத்தினருக்கு நடத்தப்படும் வழக்கமான, பெரிய அளவிலான இறுதிச் சடங்கு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஃபிலிப் கடந்த
வெள்ளிக்கிழமையன்று வின்சர் அரண்மனையில் காலமானார்.
அவருக்கு 99 வயது.
இந்நிலையில், அவருக்கு அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கு அளிக்கப்படாது என்றும் இறுதி ஊர்வலம் இருக்காது என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு அரச குடும்பத்தினருக்கே உரிய சடங்கு
களுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்தது.
இறுதிச் சடங்கு வின்சர் அரண்மனையில் நடைபெறும். இறுதிச் சடங்கில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இறுதிச் சடங்கின்போது எலிசபெத் அரசியாருக்கும் பிரிட்டனுக்கும், காமன்வெல்த் நாடுகளுக்கும் இளவரசர் ஃபிலிப் ஆற்றிய 70 ஆண்டுகளுக்கும் மேலான சேவை கௌரவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வின்சர் அரண்மனையில் உள்ள செயிண்ட் ஜார்ஜஸ் தேவாலயத்தில் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இளவரசர் ஃபிலிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோருக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை.
ஆனால் இளவரசர் ஃபிலிப்பின் பேரனான இளவரசர் ஹேரி
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என அறியப்படுகிறது.
இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரைக் குறைகூறும் வகையில் அண்மையில் இளவரசர் ஹேரியும் மேகனும் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பத்துடன் அதிருப்தி கொண்ட இளவரசர் ஹேரி தமது அரசப் பொறுப்புகளிலிருந்து விலகி தமது மனைவி, பிள்ளையுடன் லாஸ் ஏஞ்சலிசுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

