பெர்த்: ஆஸ்திரேலியாவில் வீசிய சூறாவளி செரோஜா, ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது, பின்னர் வலுவிழந்து தென்கிழக்கு நோக்கி நகர்ந்தது.
வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.
பெர்த்திலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட லோர உல்லாச நகரமான கல்பாரி அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. சூறாவளியில் தனது வீட்டின் கூரை மட்டுமே மிஞ்சியது என்று கல்பாரியில் வசிக்கும் டெப்பி மேஜர் என்பவர் தெரிவித்தார்.
"எங்களுடைய சிறிய நகரத்தில் பாதி தரைமட்டமாகிவிட்டது," என்றார் அவர்.
கல்பாரியில் 70 விழுக்காடு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளை சூறாவளி பதம்பார்த்துள்ளது.
ஏராளமான வீடுகளின் கூரைகள் பிரித்து எறியப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருட்டில் மூழ்கின. ஆனால் இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதற்கிடையே சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் தற்காலிக முகாம்களை அமைத்து உதவி செய்து வருகின்றனர்.

