அம்மான்: ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்சாவும் முதல் முறையாக கூட்டாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் ஞாயிறு அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவரும் பங்கேற்றனர்.
நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் வகையில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளவரசர் ஹம்சா சில நாட்களுக்கு முன்பு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுடன் ஹம்சா தனது பாதுகாப்பில் இருப்பதாக மன்னர் அப்துல்லா தெரிவித்திருந்தார். அரண்மனைக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்தச் சூழ்நிலையில் ஞாயிறு அன்று அம்மானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த வீரர்களுக்கு மன்னர் அப்துல்லா, ஹம்சா உட்பட அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
அரசகுடும்ப பிரச்சினைக்குப் பிறகு இருவரும் முதல் முறையாக மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

