சீனா: ஜப்பான் எடுத்துள்ள முடிவு மிகவும் பொறுப்பற்றது

சீனா: ஜப்பான் எடுத்துள்ள முடிவு மிகவும் பொறுப்பற்றது

1 mins read
82bdd2d9-222b-4405-805e-1a4d83f068ee
-

தோக்­கியோ: முடங்­கிப்­போன ஃபுக்கு­ஷிமா டயிச்சி அணு மின் ஆலை­யில் சேர்ந்­துள்ள நீர் சுத்தி­கரிக்­கப்­பட்டு 30 ஆண்டு காலத்­தில் பசி­பிக் பெருங்­க­ட­லில் விடப்­படும் என்று பிர­த­மர் யோஷி­ஹிடே சுகா­வின் அர­சாங்­கம் நேற்று தீர்­மா­னித்­தது.

ஆபத்­தான கதி­ரி­யக்கப் பொருட்­கள் நீரி­லி­ருந்து அகற்­றப்­பட்ட பின்­னரே பெருங்­க­ட­லில் சுமார் இரண்டு ஆண்­டு­களில் நீரை விடும் திட்­டம் தொடங்­கும் என்று கூறப்­பட்­டது.

ஆலை­யில் சேர்ந்­துள்ள சுமார் 1.25 மில்­லி­யன் கன மீட்­டர் தண்­ணீ­ரு­டன் என்ன செய்­வது என்று பல ஆண்­டு­க­ளாக நடந்­து­வ­ரும் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­குப் பின்­னர் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்­து­லக அணு­சக்தி நிறு­வ­னத்­தின் ஆத­ரவு ஜப்­பானுக்கு இருந்­தா­லும் உள்­ளூர் மீன­வர்­களுக்கு இம்­மு­டி­வில் உடன்­பாடு இல்லை. தங்­க­ளின் கடல்­சார் உற்­பத்தி தொடர்­பில் இருந்­து­வ­ரும் நற்­பெ­ய­ருக்கு இத­னால் சேதம் ஏற்­படும் என்று அவர்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே சீனா, தென்­கொ­ரியா நாடு­களும் தங்­க­ளின் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன. முடிவு எடுப்­ப­தற்கு முன் வெளிப்­படைத்­தன்­மை­யின்றி ஆலோ­சனை நாடா­மல் நடந்­து­கொண்ட ஜப்­பானை இரு நாடு­களும் சாடி­யுள்­ளன.

இந்­நி­லை­யில் பெருங்­க­டல் என்­பது அனை­வ­ருக்­கும் பொதுவானது என்­றும் இவ்­வாறு அணுக்­க­ழிவு நீரை ஜப்­பான் வெளி­யேற்­று­வது 'மிக­வும் பொறுப்­பற்ற' ஓர் அணு­கு­முறை என்­றும் சீனா குறை கூறி­யுள்­ளது.