தென்சீனக் கடற்பகுதியில்
கண்காணிப்புப் படைகள் அதிகரிப்பு
மணிலா: தென்சீனக் கடற்பகுதியில் சீனாவுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அதன் படைகளை அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் 200க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் காணப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை நிலவுகிறது. இந்நிலையில் அங்குள்ள அதன் கடலோரக் காவற்படை, மீன்பிடிக் கப்பல்களுக்குத் துணையாக பிலிப்பீன்ஸ் நான்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான சட்டம் அறிமுகம்
வெல்லிங்டன்: பருவநிலை மாற்றம் தொடர்பான சட்டத்தை உலகிலேயே முதன்முதலாக நியூசிலாந்து அதன் நிதி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, தங்களின் வர்த்தகம் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து வங்கிகள், காப்பீட்டாளர்கள், முதலீட்டு மேலாளர்கள் அறிக்கை தயாரிக்க வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வெளியேற்றங்கள் முற்றிலும் இருக்கக்கூடாது என்ற நாட்டின் இலக்கை அடைவதற்கு முன்னதாக பருவநிலை மீதுள்ள தங்களின் தாக்கத்தை நிதித்துறையினர் உணரவேண்டும் என்று கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களால் பாகிஸ்தானில்
தடைப்பட்ட கொவிட்-19 சிகிச்சை
லாகூர்: கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பிரதான சாலைகளை மறைத்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கிய 'டிஎல்பி' கட்சி ஆதரவாளர்களால், கொவிட்-19 நோயாளிகளை அடையவேண்டிய முக்கிய பிராணவாயு விநியோகம் தடைப்பட்டது. இறைத் தூதர் முகம்மதுவைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரங்களை மறுபதிப்பு செய்யும் உரிமத்தைப் பெற்ற சஞ்சிகை ஒன்றுக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவு அளித்ததை அடுத்து அந்நாட்டு தூதரைக் கட்சி வெளியேறச் சொன்னது. எதிர்ப்பைத் தெரிவிக்க ஏப்ரல் 20 அன்று பேரணி நடத்துவோம் என்று கூறிய கட்சித் தலைவர் உடனே கைது செய்யப்பட்டார்.

