கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் முதற்கட்டத்தில் 417,470 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா கூறியுள்ளார்.
இது செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான நிலவரம். இவர்கள் தவிர 632,668 பேர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆக ஒட்டுமொத்தமாக மலேசியா முழுவதும் இதுவரை 1,050,138 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
ஐந்து மாநிலங்களில் அதிமான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. சிலாங்கூரில் 86,577, சரவாக்கில் 65,580, கோலாலம்பூரில் 62,724, ஜோகூரில் 57,248 மற்றும் சாபாவில் 54,817 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக டாக்டர் ஆதம் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார். இரண்டு ஊசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் பட்டியலிலும் சிலாங்கூர் மாநிலமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 57,664 பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இனிமேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்தவர்கள் பட்டியலிலும் அந்த மாநிலமே பட்டியலின் உச்சத்தில் உள்ளது. மலேசியா முழுவதும் 8.69 மில்லியன் பேர் அல்லது 35.8% பேர் தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ளனர்.
தடுப்பபூசித் திட்டத்தின் முதற்கட்டம் பிப்ரவரியில் தொடங்கியது. இம்மாதம் அது முடிவதற்குள் 500,000 முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் இரண்டாம் கட்ட நடவடிக்கை தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். அப்போது 65 வயதும் அதற்கும் மேற்பட்ட சுமார் 9.4 மில்லியன் மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

