பேங்காக்: தாய்லாந்தில் நேற்று 1,335 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கொள்ளைநோய் பரவத் தொடங்கியது முதல் நேற்று பதிவான இந்த எண்ணிக்கையே அந்நாட்டில் ஆக அதிகம். மேலும் இந்த வாரத்தின் மூன்றாவது உச்ச எண்ணிக்கை அது. புதிய கிருமிப் பரவல் அலையை எதிர்த்துப் போராடி வரும் தாய்லாந்தில் இதுவரை 35,910 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் மரண எண்ணிக்கை நீண்ட நாட்களாக நூறுக்கும்
குறைவாக 97 என்ற அளவிலேயே தொடருகிறது. சொங்ரான் புத்தாண்டு விடுமுறையை தாய்லாந்து மக்கள் கொண்டாடும் நிலையில் கிருமித் தொற்று எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. எனவே கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்ற வும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

