ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புகளை மீட்கும் பணியைத் தாம் தொடங்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆக நீளமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகக் கூறிய அ வர், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் பூசலை அமைதியான முறையில் நிறைவுக்கு கொண்டுவருவதற்காவது அமெரிக்க துருப்புகள் அந்நாட்டில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற கருத்தை நிராகரித்துள்ளார்.
"இது பல தலைமுறைகளுக்கான காரியம் அல்ல. தாக்கப்பட்ட நாங்கள் தெளிவான சில குறிக்கோள்களுடன் போருக்குச் சென்றோம். அந்த குறிக்கோள்களை நாங்கள் அடைந்துள்ளோம்," என்று திரு பைடன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகள் 2,500 பேரை செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் மீட்டுக்கொள்ள திரு பைடன் இலக்காக வைத்திருக்கிறார்.
உறுதியான வெற்றியில்லாமல் வெளியேறுவது அமெரிக்காவின் ராணுவ உத்தியில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கவனிப்பாளர்கள் சிலர் குறைகூறுகின்றனர். ஆயினும், இந்தப் போரால் 2,400 அமெரிக்க ராணுவ வீரர்கள் மாண்டனர். அத்துடன் அமெரிக்காவுக்கு 2 ட்ரில்லியன் செலவு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புகளை வெளியேற்ற முயன்ற திரு டிரம்ப், தமது பதவிக்காலத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறியுள்ளார்.

