மலேசியாவின் சில பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

மலேசியாவின் சில பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

2 mins read
c7fcf165-4652-4323-acbb-ace92bdc3465
சிலாங்கூர் மாநிலம் செர்டாங் நகரில் மருத்துவ ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. ரமலான் நோன்பு அனுசரிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவாக இன்று 2,148 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த ஒரு வார காலமாக மலேசியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி 941 பேருக்கு தொற்று பதிவாகியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஆக அதிகமாக 5,278 பேருக்கு தொற்று பதிவாகியிருந்தது.

சென்ற ஆண்டு ரமலான் உணவுச் சந்தைகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து ரமலான் நோன்பு தொடங்கியதால் அந்தச் சந்தைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உணவுக் கடைகள் காலை 6 மணி வரை திறந்திருக்கலாம்.

சந்தைகள் செயல்பட அனுமதி அளித்தது உட்பட தளர்த்தப்பட்ட கொவிட்-19 விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் தடுப்பூசி போடுவதற்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான கைரி ஜமாலுதீன் நேற்று கேட்டுக்கொண்டார்.

ரமலான் சந்தைகளுக்குச் செல்வோர் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என முன்பு குறிப்பிட்டிருந்த பிரதமர் முகைதீன் யாசின், நாடுதழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மூன்றாவது முறையாக நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என்றார். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில்

இருந்தாலும் மார்ச் மாதவாக்கில் அவை தளர்த்தப்பட்டன. இருப்பினும் ஜனவரி முதல் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு அனுமதி இல்லை.

அடுத்த மாத மத்திவாக்கில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின்போதும் மாநிலங்களுக்கு இடையிலான தடை தொடர பரிந்துரைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். அண்மையில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதையொட்டி, கோத்தா பாரு உட்பட கிளந்தானின் 10 மாவட்டங்களிலும் சரவாக்கின் 5 மாவட்டங்களிலும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.