ஹாங்காங்குக்குச் செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் 7 நாள்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழல் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலிருந்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
குறைந்த அளவில் கொரோனா தொற்று அபாயம் உள்ள சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஹாங்காங் சென்றால், 14 நாள்களுக்குப் பதிலாக 7 நாள்களுக்கு மட்டும் தனிமைப்
படுத்திக்கொள்ளலாம்.
கொரோனா தொற்று அபாயம் நடுத்தர, அதிக அளவில் உள்ள நாடுகளிலிருந்து ஹாங்காங்குக்குச் செல்வோர் தற்போது நடப்பில் இருக்கும் 21 நாள்களுக்குப் பதிலாக 14 நாள்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஹாங்காங்குக்குச் செல்லும் பயணிகள், தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மேலும் 7 நாள்களுக்கு சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும் என ஹாங்காங் அரசாங்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சீனா தவிர மற்ற நாடுகளி
லிருந்து ஹாங்காங்குக்குத் திரும்பும் ஹாங்காங் குடிமக்கள் தொடர்ந்து 21 நாள்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, விமானப் பயணங்களின் மூலம் உருமாறிய கொரோனா தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, விமானங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங் சென்றதும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் ஒரு விமானத்தில் சென்ற பயணிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த விமானம் 14 நாட்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இந்த எண்ணிக்கை 5 அல்லது அதற்கு மேல் என்று இருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்தது.
ஏழு நாள்களுக்குள் ஒரே இடத்திலிருந்து கிளம்பும் ஒரே விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஏதாவது இரண்டு விமானங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அந்தத் தடை பொருந்தும்.
அடுத்தடுத்த இரண்டு விமானங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு தொற்று இருந்தால் இத்தகைய தடை முன்பு விதிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் யாருக்காவது கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டு, அதே விமானத்தில் பயணம் செய்த வேறு ஒரு பயணி எல்லை கடந்த பயணிகள் சட்டங்களின்கீழ் விதிமுறைகளை மீறினாலும் அந்த விமானம் 14 நாள்களுக்குத் தடை செய்யப்படும் என்ற முன்பிருந்த விதிமுறை இப்போதும் நடப்பில் உள்ளது.
தென்கொரியாவில் காணப்படும் N501Y வகை கொரோனா கிருமி ஹாங்காங்கில் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அத்தகைய கொரோனா தொற்று உள்ள குறைந்தது ஐவர் பயணம் செய்த விமானங்களுக்கும் 14 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய விமானங்கள் கிளம்பிய இடங்களில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் இருந்த பயணிகள் ஹாங்காங்குக்குள் நுழையவும் 14 நாள்களுக்குத் தடை விதிக்கப்படும்.
சிங்கப்பூரும் ஹாங்காங்கும் பயண ஏற்பாடுகள் குறித்த பேச்சு வார்த்தைகளின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் - ஹாங்காங் இடையே நேரடி விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி, பயணிகள்
தனிமைப்படுத்தப்படமட்டார்கள்.
இந்த நேரடி விமானப் பயணம் மேற்கொள்வோர் பயணத்துக்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என மார்ச் மாதத்தில் ஹாங்காங் முன்மொழிந்தது.
பயண ஒப்பந்தங்கள் (டிராவல் பபல்) மூலம் இயங்கும் விமானங்களில் ஹாங்காங்கிலிருந்து பயணம் மேற்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என இந்த வாரத்தில் அந்நாட்டு தலைமை நிர்வாகி கேரி லாம் குறிப்பிட்டார்.

