யங்கூன்: மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் முக்கிய தலைவர்களில் ஒருவரான வாய் மோ நயிங் என்பவர் பாதுகாப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். நண்பர்கள், சக ஊழியர்களுடன் மோட்டார்சைக்கிளில் பேரணி ஒன்றை நடத்தியபோது காரில் சென்ற பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்ததாகக் கூறப்பட்டது.
ராணுவத்திற்கு எதிராகப் போராடுவோரில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் வாய் மோ நயிங் 25 வயதான முஸ்லிம் இளையர்.
யங்கூனிலிருந்து கிட்டத்தட்ட 700 கி.மீ. வடக்கில் இருக்கும் மொனிவா நகரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
மோட்டார்சைக்கிள்கள் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்த் திசையிலிருந்து வந்த கார் வேகமாக மோட்டார்சைக்கிள்களின் அருகில் சறுக்கி திடீரென நின்றதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவின. ஆனால், அந்தக் காணொளி இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

