புதிய சுரங்கங்களை அமைக்க அனுமதி; 9 ஆண்டு தடை நீக்கம்
மணிலா: புதிய சுரங்கங்களை அமைப்பதற்கு கடந்த 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை விலக்கி உத்தரவிட்டுள்ளார் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே. புதிய சுரங்க திட்டப்பணிகளைத் தொடங்கவும் ஏற்கெனவே இருந்த சுரங்க ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி தொடரவும் வகை செய்யும் விதத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார் அவர். உலகிலேயே அதிக அளவில் நிக்கல், தாமிரம், தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக பிலிப்பீன்ஸ் உள்ளது. நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையினர் புதிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளையில், சுரங்கப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பில் கடுமையான விதிமுறைகளை உருவாக்கவும் அந்தத் துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'எளிமையாக, பாதுகாப்பாக, அபாரமாக குளிர்கால ஒலிம்பிக்'
பெய்ஜிங்: கொரோனா கிருமிப் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்கை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உறுதிபூண்டுள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங். "அனைத்து தரப்பினரின் பங்கெடுப்பு, துடிப்பான ஆதரவுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எளிமையான, பாதுகாப்பான, அபாரமான வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும்," என பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காமல் விட்டுவிடுவது குறித்து வெளிநாட்டுப் பேராளர்கள் கருதுவதாகக் கூறப்பட்ட நிலையில், கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய உறுதிமொழியை அனைத்துலக நாடுகளுக்கு சீனா அளிக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.
தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மருத்துவர்கள் கோரிக்கை
சிட்னி: கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான மருந்தகங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என நேற்று ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கம் கூறுவது போல பெரிய தடுப்பூசி மையங்களை அமைக்க தளவாடத் தேவைகள் சவால்மிக்கதாகிவிடும் எனவும் அந்தச் சங்கம் தெரிவித்தது. ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி போடுவதை நிறுத்திவைத்துள்ள ஆதிரேலியா, கூடுதலாக ஃபைசர் தடுப்பு மருந்து வாங்கத் திட்டமிடுகிறது. அந்த ஃபைசர் தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்த பிறகு பெரிய அளவிலான தடுப்பூசி மையங்களை அமைக்கலாம் எனவும் தற்போதைக்கு கூடுதல் மருந்தகங்களில் தடுப்பூசி போடுவது உகந்தது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

